Pages

Thursday, September 9, 2010

Wednesday, July 28, 2010

பொன்மொழிகள் 02

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
-தாமஸ் ஆல்வா எடிசன்

விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
-பகவான் இராமகிருஷ்ணர்

உங்கள் கவலைகளை விளம்பரப் படுத்தி பயனில்லை. ஏனெனில் அவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.
- லயன்

மேதைக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கை நடத்த மட்டும் தெரியாது.
- ஓர் அறிஞர்

தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள் ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்.
- வெஸ்ஸிஸ்

பணக்காரர்களின் உணவை விட ஏழைகளின் உணவே அதிகம் ருசிக்கிறது. ஏனெனில் ஏழைகள் தான் பசித்து உண்கின்றனர்.
- ரிக் வேதம்

கோபம் என்பது குறைந்த அளவு பைத்தியமே.
- ஹௌஜ்

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.
- பல்கேரிய பழமொழி

புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
- பார்பரா சச்மன்

யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள். செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள். எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.
- எமெர்சன்

கோபம் என்னும் கொடிய அமிலமானது அது எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.
- கிளாவுண்டல்

புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.
- சுவாமி விவேகானந்தர்

உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்; உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.
- பாரசீக பழமொழி

துடைக்க முடியாதவற்றை தூசியாவது தட்டவேண்டும்.
- ஜெர்மானிய பழமொழி

அது அவரது தனிப்பட்ட கருத்து என ஒதுக்குகிறோம், ஆனால் உலகத்தில் எந்த சீர்திருத்தமும் முதலில் ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தாகத்தான் இருக்கும்.
- எமெர்சன்

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
-ஓர் அறிஞர்

ஒரே நேரத்தில் இரு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
- கொரிய பழமொழி

ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும், ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.
-ஷெர்லாக் ஹோம்ஸ்

இடைவிடாமல் சிந்திக்கவும், உறுதியாக நிற்கவும் தகுதியுடையவனாகவுள்ள எவனொருவனும் தன்னையறியாமலேயே மேதையாகிவிடுகிறான்.
- கதே

தவறு செய்யாத மனிதன் இல்லை, ஆனால் முட்டாள்கள் அதை பிடிவாதமாக பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.
-எமெர்சன்

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது.
-சீனப் பழமொழி
பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009

தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார்.

1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது.

குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி.

சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி.

""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி.

""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி.

""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி.

""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி.

""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர்.

""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி.

""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி.

ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர்.

பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார்.

பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார்.

""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார்.

1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது.

ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!

Friday, July 9, 2010

தமிழ் எனும் அரசியல் - வாஸந்தி

தமிழ் எனும் அரசியல்
வாஸந்தி


தமிழன் தனிப்பிறவி என்பதில் சந்தேகமில்லை. தலை நிமிர்ந்து நிற்பவன் தமிழன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வது தனது முதுகு எலும்பு காணாமல் போனதை மறைக்க. அது காணாமல் போய் வெகுகாலமாயிற்று. தமிழனின் பெருமையைப் பாடி , அவனது சுய மரியாதை உணர்வைத் தட்டி எழுப்பி , தமிழ் மொழி வெறியேற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவை எல்லாமே சித்தாந்தங்களும் இல்லை. புண்ணாக்குமில்லை-வெறும் அரசியல் என்று தொடர்ந்து காட்டிவந்தாலும் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மூளைச் சலவை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் அவனைச் செயலிழக்கவைக்கப் போகிறது. சுயமரியாதை என்கிற பெயரில் ஏற்பட்ட இயக்கத்தின் முடிவில் தனி மனித சுயகௌரவத்தை இழந்து நிற்பதைக் கூட அறியாத இளிச்சவாயனாக்கிவிட்ட மூளைச் சலவை. தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கட்சிக்கு இடமே இல்லை என்று நினைக்கும்படியாக திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. அதிலும் ஒன்று, வீர்யமற்று ICUவில் கிடக்கும் நிலையில் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே ஆளுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அது மன்னராட்சி இல்லை. ஜனநாயக முறையிலேயேதான் ஆளுவார்கள். ஒரு அரசப் பரம்பரை உருவாகிவிட்டது. ஆனால் வாரிசு அரசியல் செய்ய அது சங்கர மடம் இல்லை. ஆட்சியை எப்படிப் பிடிக்கமுடியும் , நினைத்த அளவுக்கு ஜனநாயகத்திலும் வாக்குகளை எப்படி அள்ளமுடியும் என்று தெரிந்து வைத்து மக்களின் 'அமோக ஆதரவுடன்’ ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கும் குடும்பம். 40,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று சொன்னால் 'நம்புங்கள் நாராயணனை' என்று வெளியாகும் ஜோசியக் கணிப்பைவிட மிகத் துல்லியமாகப் பலிக்கும். அதை சாத்தியமாக்கிக்கொள்ள அடித்தளம் அமைக்கத் தெரிந்த பிறகு என்ன சிக்கல் இருக்கமுடியும்?
தமிழன் அதையெல்லாம் துருவிப் பார்க்கவேண்டிய நிலையில் இல்லை. சொரணை என்ற குணத்தை இழந்தும் வெகுகாலமாகிவிட்டது. அவன் ராஜ விசுவாசம் மிக்கவன். அம்மாபெரும் குடும்பத் தலைவர், முத்தமிழ் வித்தகர் மட்டுமில்லை, தமிழ்நாட்டு ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவர். இருக்க நிலமும் தலைக்கு மேல் கூரையும் அவனது உயிர்காக்கும் காப்பீட்டுத் திட்டத்தையும் அளிப்பவர். அவருக்காக ஒரு தொண்டர் கோவில் கட்டுகிறாராம். கண்டிப்பாகக் கட்டவேண்டும். நடிகை குஷ்புவுக்கே தமிழ் மக்கள் கட்டியபோது கலைஞருக்குக் கட்டுவதில் என்ன தவறு? அதை அவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். கடவுள் போன்றவர். கடவுளைவிட மேலானவர். கடவுளை வேண்டினால்தான் வரம் கிடைக்கும். கிடைக்காமலும் போகும். அவனவனது விதியை, அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. கலைஞரோ நிஜமாகவே வேண்டாமலே ,கேட்காமலே கொடுப்பவர்.

அத்தகைய மாமனிதர் தமிழுக்கு ஒரு விழா எடுக்கிறார். அதற்காக ஒரு பாடலை இயற்றினார். அதன் தலைகால் புரியாமல் போனாலும் தூய தமிழில் எழுதப்பட்ட பாடல். அதை மெருகேற்ற இளைய தலைமுறைக்கேற்றவாறு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து- பாவம் எத்தனை கஷ்டப்பட்டாரோ- மத்திய அமைச்சர் ராசாவின் புண்ணியத்தில் தமிழர்களின் மொபைல் ரிங் டோனாக இலவசமாகக் கிடைத்தது. கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள். மாநாட்டிற்காக. அதை எல்லா தமிழனும் கண்டு களிக்க தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை கிடைத்தது. எத்தனை கரிசனம் கலைஞருக்கு! பிள்ளைகளுடன் கோவைக்கு ஒரு சுற்றுலா செல்ல எப்படிப்பட்ட வாய்ப்பு! மாநாட்டு ஏற்பாடுகள் தமிழனின் வாயைப் பிளக்க வைத்தன. மாநாட்டுப் பந்தலின் முன் வரிசைகள் முழுவதும் நியாயமாக அரசு குடும்பத்து உறுப்பினர்கள் நிரப்பிக் கொண்டார்கள். அதற்குப் பின்னால் இருந்தவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள். வெகு உற்சாகமாக தொலைக்காட்சி காமிராக்களுக்குக் கையசைத்துக்கொண்டிருந்தார்கள். தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமுண்டா என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் தமிழுக்காக வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். விழா நாயகரின் ஆஸ்தான துதிபாடிகள் மேடையில் அவருக்குச் சாமரம் வீசியபடி இருந்தார்கள். தமிழில் புலமை மிக்கவர்கள். தங்கள் புலமையைத் துதிபாடிக் காட்டுவதிலேயே ஆர்வமுள்ளவர்கள். வல்லவர்கள். அரசருக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அத்தனை வேலை பளுமிக்க அரசருக்கு அத்தகைய ஆட்கள் அருகில் இருப்பது தேவைதான். அவர்களது துதிபாடல்களே அவரை இன்னமும் மார்க்கண்டேயனாக வைத்திருக்கும் டானிக் என்று வதந்தி. அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனியும் பொடிவைத்துப் பாடும் அவர்களது சொற்களில் கலந்திருக்கக்கூடும். அவர்கள் மொத்தத்தில் பாக்கியசாலிகள். "செம்மொழி சிங்கமே! எங்கள் செல்லச் சிங்கமே! உன்னைக் கும்பிட்டால் ஊரைக் கும்பிட்டமாதிரி!" "தலைவா. நீ சாகா விளக்கு , அகலாவிளக்கு" "சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய் , திரை உலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள், ஆனால் திரை உலகையே கலைஞர் ஜெயித்திருக்கிறார்" போன்ற ரத்தினமாய் ஜொலிக்கும் தமிழ்க்'கவிதைகளை' ஜோடித்து அரசருக்கு சற்றும் அலுப்புத் தட்டாமல் பார்த்துக்கொண்டார்கள். ஒவ்வொரு வரியைக் கேட்கும்போதும் அரசருக்குத் தெம்பு அதிகரித்தது. தாமே ‘தமிழினக் காவலர்’ என்று உறுதி பிறந்தது.
ஆமாம், யாருக்கு நடந்த விழா அது? யாருக்கும் அதைக் கேட்கத் தோன்றக்கூட இல்லை. அது அசம்பாவிதமான கேள்வி. முதல்வர் கருணாநிதியின் படைப்புகளைப்பற்றி 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவருடைய மகள் கனிமொழியின் கவிதைகள் பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டின் அழைப்பின் பேரில் வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் , வந்த மிகச் சில சிறந்த ஆய்வாளர்கள் தங்கள் அமர்வுகளில் இருந்த காலி இருப்பிடங்களைக்கண்டு நொந்தார்கள். அவமானப் பட்டார்கள். ஈழத் தமிழ் படைப்பாளிகளைக் காணோம். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கொழும்பிலிருந்து வருகை தந்தது இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்று தெளிவு செய்துவிட்டது. அது போதாதா கருணாநிதிக்கு, விஷமிகள் பலரின் வாயை அடைக்க? தமிழின விரோதி என்று அவரைப் பழித்தார்கள்! அவரை. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவரை. விரலைக் கீறி தனது குறுதியால் 'தமிழ் வாழ்க' என்று 14 வயதில் சுவரில் எழுதியவரை. தொடர்ந்து தமிழுக்காக, தமிழினத்துக்காக வாழ்பவரை. அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆங்கிலம் பேசத்தெரியாமல், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் எல்லோருக்கும் விளங்குகிற மொழியில் நாடாளுமன்றத்தில் பேச இயலாமல் தமிழில் பேச அனுமதியில்லாமல் கூனிக்குறுகி ஓடி ஒளிந்தபோது அவரது தமிழ் ரத்தம் எப்படிக் கொதித்தது என்று யாருக்குத் தெரியும்? தமிழின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை அந்தத் தகுதியில்லா வட இந்திய அரசியல்வாதிகள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? எப்படியோ செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் செம்மொழி என்பதன் விளக்கம் தமிழனுக்கே தெரியாத நிலையில் வட இந்தியனுக்கு எப்படித்தெரியும்? இப்படிப்பட்ட மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து பாமரத் தமிழனையும் வட இந்திய அரசியல் பெருந்தகைகளையும் அழைத்து அசத்தினால் தமிழுக்கு லாபமோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் லாபம். பல அரசியல் காய்களை வீழ்த்தும் மிகச் சுலப கோலாகல யுக்தி. அவரது அரசியல் பலம் புலப்படும். தமிழை நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய அந்தஸ்துடன் தேசிய மொழியாக்கும் முயற்சி வெற்றிபெற்றால் அதைவிட தமிழுக்கு சிறந்த தொண்டு எந்தக் கொம்பனும் செய்திருக்கமுடியாது. தனது இலங்கைத் தமிழர் பிரச்சினை அணுகுமுறையை விமர்சிப்பவர்களுக்கும் இது ஒரு பதில். அந்த ஐந்து நாட்களும் கோவை வானம் அதிர்ந்தது - "தமிழ் என்றால் கலைஞர். கலைஞர் என்றால் தமிழ்" என்ற முழக்கத்தில்.
தமிழ் சினிமாக்கள் எல்லாம் தூய தமிழ் தலைப்பில் வருகின்றன. கடைகளின் பெயர்கள் தமிழில். வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படவிருக்கின்றன. அவரது அரசின்கீழ் மேயரிலிருந்து எல்லா ஊழியரும் தமிழார்வம் மிக்கவர்கள். பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளிகளைத் தேடி அலைகிறார்கள். அதற்கு அவர் பொறுப்பில்லை. அவரது மகளே ஆங்கிலப் பள்ளியில் படித்தாள். நல்ல வேளை, அவளால் தில்லியில் அந்தத் திமிர் பிடித்த கூட்டத்தைச் சமாளிக்க அவளது ஆங்கிலம் உதவுகிறது. மற்றவர்கள் தமிழில்தான் படிக்கவேண்டும்- மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் - எல்லாமே. வெளி இடத்தில் எவனும் வேலை கொடுக்கமாட்டான் . வெளிநாட்டுக் கம்பெனிகள் சென்னைக்கு வருவது பொருளாதாரத்துக்கு நல்லது. அவர்கள் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதற்குத் தீர்வும் சமாதானமும் வெகு சுலபம். தமிழில் படித்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை. பிரித்தாளும் அரசியலா ? தமிழுணர்வு அற்றவர்கள்தான் அப்படிச் சொல்வார்கள்.
கருணாநிதியின் செயல்பாட்டில் எதுவுமே அரசியல் இல்லை. தமிழினத் தலைவர் தமிழன்னைக்குச் செய்யும் ஒப்பற்ற தொண்டு மட்டுமே. தமிழன்னை எங்கே?
உஷ். ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்க

Sunday, July 4, 2010

கன்ஃப்யூசியஸ் தத்துவங்கள்

சிறந்த ஆட்சி எது ?
மூன்று விஷயங்கள் தேவை.
1. நாட்டில் போதிய உணவு இருப்பு
2. தற்காப்புக்கு ராணுவம்
3. மக்கள் நம்பிக்கை.
ஏதாவது ஒன்றை விடவேண்டுமென்றால்,
ராணுவம்.
இரண்டாவதாக ஒன்றை விட வேண்டுமென்றால்,
உணவு இருப்பு.
காரணம் : உணவு இல்லாவிட்டால் மக்கள் மடிய நேரிடலாம். அப்படிப் பல சமயம் நடந்து இருக்கிறது. இருப்பினும் மறுபடியும் சமுதாயம் துளிர் விடாமலிருந்ததில்லை. ஆனால் மக்கள் வைக்கும் நம்பிக்கையை அரசு இழந்தால் நாட்டின் கதி அவ்வளவுதான்.

நடுவெழுத்தலங்காரம் உ வே சாமிநாதையர் நூலிலிருந்து

கட்டோம் புதலெனக் காமாதி யாறுங் கரிசறுத்தோம்
உட்டோம் புதவு திறந்தின்ப வீடுபுக் குச்சரித்தோம்
சிட்டோம் புதல்வி மண் ணோருந்தி கஞ்சந் தெளிவின் முன்பின்
விட்டோம் புதலுறு நள்ளெழுத் தான்முல்லை மேவப்பெற்றே.

காமாதி ஆறும் கட்டோம்; கட்டோம் - களைந்தோம்
உள்தோம் கரிசு அறுத்தோம் - அகக் குற்றமாகிய ஆணவ மலத்தை அறுத்தோம்.
புதவு - கடவு;
சிட்ஓம் உச்சரித்தோம் -- ஞானமயமாயுள்ள பிரணவத்தை உச்சரித்தோம்.

புதல்வி, மண், ஓர் உந்தி ( ஆறு ), கஞ்சம், தெளிவு என்பவற்றின் முதலெழுத்தையும், ஈற்றெழுத்தையும் விட்டுப் பாதுகாக்கப் பெற்ற நடுவெழுத்துக்களால்; ( இது ஒரு நடுவெழுத்தலங்காரம் ) இதனால் குறிக்கப்படும் தொடர் மாசிலாமணி என்பது ;
குமாரி ( புதல்வி ), காசினீ ( மண் ), பாலாறு ( ஓர் உந்தி ), தாமரை ( கஞ்சம் ),
துணிவு ( தெளிவு ) என்னும் ஐந்து சொற்களின் நடுவெழுத்துக்கள் ஐந்தும் சேர்ந்தால் மாசிலாமணியென்றாதல் காண்க.



மாசிலாமணியென்பது வடதிருமுல்லைவாயிற் சிவபெருமான் திருநாமம்.

முல்லை திருமுல்லைவாயில். முல்லை மேவப்பெற்று மாசிலாமணியால் கட்டோம். அறுத்தோம். உச்சரித்தோம் என இயைக்க.
இது திருமுல்லைவாயிலந்தாதியிலுள்ள 50ம் பாட்டு.

பொன்மொழிகள் 01

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. மனத்தை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை.
கடலுக்கு அப்பால் ப. சிங்காரம்

நாம் செய்கின்ற காரியம் நியாயமான காரியம் என்பதை உணரும்போது நமது சக்தி மும்மடங்கு பெருகும் - மகாத்மா காந்தி

குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவுமே சாத்தியமே! பாப்லோ நெருடா ( சிலி )

இயற்கை நியதிப்படி, நீங்கள் செய்யும் காரியத்துக்கு வெகுமதி என்று எதுவும் கிடையாது. தண்டைன என்றும் எதுவும் கிடையாது. விளைவு என்று ஒன்றுதான் உண்டு. -- ராபர்ட் இங்கர்சால்

நமது புலன்கள் நம்மை ஏமாற்றுவதில்லை. இதற்குக் காரணம் அவை எப்போதும் சரியான தீர்ப்பு அளிக்கின்றன என்பதன்று. அவை எந்தத் தீர்ப்புமே அளிப்பதில்லை. -- தத்துவவியலாளர் கான்ட்


குரோதத்தினால் குரோதம் ஒருநாளும் அற்றுப் போவதில்லை. குரோதம் அன்பினால் அற்றுப் போகும். இது ஒரு நிரந்தர விதி. கௌதம புத்தர்

நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதனைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன். -- வால்ட்டேர்


இரகசியமாக எதையும் செய்யாதே; பிறரிடமிருந்து நீ ஒளிக்க விரும்புவதை ஒரு போதும் செய்யாதே.

ஊருடன் கூடி வாழ் கடவுளை எங்கே தேடுகிறீர்கள் ? அவன் கோவிலின் இருளில் இல்லை. அதோ! உழைத்து வியர்த்துப் போயிருக்கிறானே --அங்கே இருக்கிறான்.
-- தாகூர்

நமக்குள் வளரும் எதிரிகளை அடக்குவதுதான் ஆண்மையின் அறிகுறி. புறப்பகைவர்களை வெல்லுவதைக் காட்டிலும் இதற்கு அதிக தைரியம் வேண்டும்.
--- தாகூர்

யாரிடமும் சொல்ல முடியாத வருத்தமே கொடிய வருத்தமாகும். -- ராஜாஜி

என்னுடைய தாய்நாடு எனக்கு எவ்வளவோ அருமையானது. ஆனால் தாய்நாட்டின் சுதந்திரம் எனக்குத் தாய்நாட்டைவிட அருமையானது. -- வால்டேர்

ஒரு தேசபக்தனை அவனுடைய தேசத்திலிருந்து விரட்டி விடலாம். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து அவனுடைய தேசத்தை விரட்ட முடியாது. -- வால்டேர்

என் தாய்த் திருநாடே, உன் பொருட்டு நான் கந்தையை அணிவேன், கூழை உண்பேன். உனக்கு சேவை செய்வதைக் காட்டிலும் சிறந்த பாக்கியம் வேறு என்ன இருக்கிறது. -- மாஜினி

நம் மனதுக்குத் தோன்றியதைச் செய்து, மனம் போன போக்கில் போவது சுதந்திரமல்ல. எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தீர ஆலோசனை செய்து அதன்படி நடப்பதுதான் உண்மையான சுதந்திரம். -- கரிபால்டி

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - பிரெஞ்சுப் புரட்சி

ஒருவன் ஒரு கொள்கைக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்திருக்கும்போது அவ்வாறு உயிரைத் தியாகம் செய்வதே புகழ் என்று கருதும்போது அவனையோ அல்லது அக்கொள்கையையோ அடக்கிவிட யாராலும் முடியாது.

புலவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுடைய கவி இனிய கவி. அதைப் பொய்யான புகழுக்குப் பயன்படுத்தாதீர்கள். குப்பை போன்ற செலவத்திற்காக உங்கள் உண்மையை இழந்துவிடாதீர்கள். மிகமிக நல்ல வான்கவி கொண்டு இழிவான நிலையில் மனிதரைப் பாடாதீர்கள். மலை போன்ற கை உடையவன், மலை போன்ற தோள் உடையவன் என்று பச்சைப் பசும் பொய்களை பேசாதீர்கள். நான் சொன்னால் இது விரோதமாகத் தோன்றலாம். ஆனாலும் சொல்லுகின்றேன். கேளுங்கள். --- நம்மாழ்வார்

ரூசோ அரசியலை நிர்வகிக்கும் அதிகாரியின் மூன்றுவித மனப்பான்மைகள்

அரசியலை நிர்வகிக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் மூன்று வித மனப்பான்மைகள் இருக்கின்றன.
முதலாவது அவனுடைய சொந்த மனப்பான்மை, இது சுயநலத்தை நாடுகிறது.
இரண்டாவது ஆளுகின்ற மனப்பான்மை. இது சர்க்கார் நலத்தை நாடுகிறது.
மூன்றாவதாகத்தான் மக்களுடைய மனப்பான்மை. இது மக்களுடைய நன்மையை நாடுவது.
நியாயமும் நேர்மையும் கொண்ட அரசியல் நடைபெற வேண்டுமானால், சர்க்கார் நிர்வாகிகள் முதலாவது மனப்பான்மையைக் கைவிட வேண்டும். அதாவது அவர்கள் சுயநலத்தைக் கருதக் கூடாது இரண்டாவது மனப்பான்மை ஓர் அளவுடன் இருக்க வேண்டும். அதாவது, சர்க்காருடைய நன்மையைக் கவனிக்க வேண்டுமென்றாலும் அதுவே முக்கியமானதாக இருக்கக் கூடாது. மூன்றாவது மனப்பான்மையாத்தான் அவர்கள் சிறப்பாகக் கொள்ள வேண்டும். அதாவது மக்களுடைய நன்மையை முக்கியமாகக் கொண்டு அந்த நன்மையின் மூலமாக மற்ற இரண்டு நன்மைகளையும் அடையப் பார்க்க வேண்டும். இந்த முறையை விட்டுவிட்டு முதல் இரண்டு நன்மைகளின் மூலமாக மக்களுடைய நன்மையை நாடவே கூடாது. ---- ரூஸோ

பாரதியாரின் இந்தியா இதழ் கட்டுரை மாஜினியைப் பற்றி

மாஜினி

மாஜினி என்ற இத்தாலிய தேசபக்தர் பால இத்தாலி என்ற சங்கம் தொடங்கி வேலை செய்தார். முதற் சருக்கத்தில் தேசபக்தர்களின் பக்கம் தோல்வியடைந்து போய், கொடுங்கோலரசாராகிய ஆஸ்திரியாவின் பக்கமே வெற்றி வாய்ந்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மாஜினி எழுதியது ( மாஜினி சுவிட்சர்லாந்தில் வாசம் செய்து வந்தான் )
எனது ஆத்மாவிலே வெளி மாறுபாடுகளால் வசப்படுத்தப்படாத ஒரு சக்தி விளஙிகி நின்றது. எனது ஆத்ம நிலை தன்னிலே தானடங்கியதாய் வெளித் தோற்றங்களினால் சலனமடையும் இயற்கையில்லாதது. ஆத்மா தன்னைச் சுழ்ந்திருக்கும் உலகை அடக்கி ஆள வேண்டியது; உலகத்தின் ஆட்சிக்குத் தான் உட்படக்கூடாது என்ற நம்பிக்கை அக்காலத்திலே எனக்கிருந்தது. எனது ஜீவமுறை உள்ளிருந்து வெளியே வீசும் தன்மை கொண்டிருந்தது. வெளியேயிருந்து உள்ளே வீசும் தன்மையுடைத்தன்று.
இத்தாலிய ஜாதியைத் துர்ப்பல நிலைக்குக் கொண்டு வந்த முக்கியமான குறையாதெனில் அது ஸ்வதந்திரத்திலே விருப்பமில்லாமையன்று. அந்த ஜாதியாருக்குத் தமது சொந்தத் திறமையிலே நம்பிக்கையில்லாமையும், எளிதில் சோர்வடைந்து விடுதலும், ஸ்திர சித்தமில்லாமையுமே முக்கிய குறையாகும்.
( ஸ்திர சித்தமில்லாவிடின் தர்மம் கூட பயனற்றதாய் முடியும் ). நம்மவரிடையே உள்ளக் கருத்திற்கும் புறச் செய்கைக்கும் லயமில்லாதிருக்கின்றது. இந்த லயமின்மை மஹா விநாசகரமானது. இதுவே நமது ஜாதியாரின் முக்கிய குறையாகும்.
இந்தப் பெருநோயாத் தீர்க்க ஒரு வழியுண்டு. அதாவது இதனளவுக்குத் தக்கபடி விஸ்தாரமாக லிகிதங்கள் மூலமாகவும், உபந்யாஸங்கள் மூலமாகவும், தேச ஜனங்களுக்கு உபதேசம் புரிவதேயாம்.
மன உறுதியிலேயும் கடைப்பிடிப்பிலேயும் திண்மையுற்று, மனச்சோர்வுக்கு வசப்படாத மனிதர்கள், நிஷ்டூரத்தை உல்லங்கனஞ் செய்து ஒரு பெரிய தர்மத்தின் பொருட்டு அபஜயத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள், இன்று தளர்ச்சியடைந்தாலும் மறுநாள் மீண்டும் உயிர்த்தெழுபவர். எப்பொழுது பார்த்தாலும் மனோயுத்தத்திற்குச் சன்னதமாகிக் காலத்தையும் விதியையும் இகழ்ந்து இறுதி வெற்றியில் நீங்காத பற்று நிரம்பியவர். இத்தன்மை கொண்ட பக்தர்களின் ஸமாஜம் ஒன்று இன்றியமையாதது.
( 21. 11. 1908 இதழ் 7 பக்கம் 5 --- இந்தியா ) மாஜினி

நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் புதினத்திலிருந்து

நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார்.

குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!'

தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"

-பரிபாடல்

'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத்
மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்"

ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது.

முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான்.
பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.

அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?"

"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம்! பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு."

"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி."

"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து."

அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன்.

"குடையைப் பிடித்த கரம் - மனக்
கொதிப்பைச் சுமந்த முகம் - பெரும்
பசியில் தளர்ந்த நடை"
"இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்"

'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி'

"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."

உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன."

"நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே."

"அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!"
"பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்."

"போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?"
"கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?"

"உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு.

? பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்."


கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது?

"இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது.

"இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை" என்று

அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான்.

இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். 'உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.