Pages

Sunday, July 4, 2010

நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் புதினத்திலிருந்து

நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார்.

குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!'

தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"

-பரிபாடல்

'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத்
மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்"

ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது.

முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான்.
பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.

அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?"

"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம்! பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு."

"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி."

"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து."

அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன்.

"குடையைப் பிடித்த கரம் - மனக்
கொதிப்பைச் சுமந்த முகம் - பெரும்
பசியில் தளர்ந்த நடை"
"இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்"

'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி'

"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."

உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன."

"நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே."

"அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!"
"பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்."

"போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?"
"கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?"

"உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு.

? பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்."


கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது?

"இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது.

"இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை" என்று

அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான்.

இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். 'உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.

No comments:

Post a Comment