Pages

Friday, July 9, 2010

தமிழ் எனும் அரசியல் - வாஸந்தி

தமிழ் எனும் அரசியல்
வாஸந்தி


தமிழன் தனிப்பிறவி என்பதில் சந்தேகமில்லை. தலை நிமிர்ந்து நிற்பவன் தமிழன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வது தனது முதுகு எலும்பு காணாமல் போனதை மறைக்க. அது காணாமல் போய் வெகுகாலமாயிற்று. தமிழனின் பெருமையைப் பாடி , அவனது சுய மரியாதை உணர்வைத் தட்டி எழுப்பி , தமிழ் மொழி வெறியேற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவை எல்லாமே சித்தாந்தங்களும் இல்லை. புண்ணாக்குமில்லை-வெறும் அரசியல் என்று தொடர்ந்து காட்டிவந்தாலும் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மூளைச் சலவை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் அவனைச் செயலிழக்கவைக்கப் போகிறது. சுயமரியாதை என்கிற பெயரில் ஏற்பட்ட இயக்கத்தின் முடிவில் தனி மனித சுயகௌரவத்தை இழந்து நிற்பதைக் கூட அறியாத இளிச்சவாயனாக்கிவிட்ட மூளைச் சலவை. தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கட்சிக்கு இடமே இல்லை என்று நினைக்கும்படியாக திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. அதிலும் ஒன்று, வீர்யமற்று ICUவில் கிடக்கும் நிலையில் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே ஆளுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அது மன்னராட்சி இல்லை. ஜனநாயக முறையிலேயேதான் ஆளுவார்கள். ஒரு அரசப் பரம்பரை உருவாகிவிட்டது. ஆனால் வாரிசு அரசியல் செய்ய அது சங்கர மடம் இல்லை. ஆட்சியை எப்படிப் பிடிக்கமுடியும் , நினைத்த அளவுக்கு ஜனநாயகத்திலும் வாக்குகளை எப்படி அள்ளமுடியும் என்று தெரிந்து வைத்து மக்களின் 'அமோக ஆதரவுடன்’ ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கும் குடும்பம். 40,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று சொன்னால் 'நம்புங்கள் நாராயணனை' என்று வெளியாகும் ஜோசியக் கணிப்பைவிட மிகத் துல்லியமாகப் பலிக்கும். அதை சாத்தியமாக்கிக்கொள்ள அடித்தளம் அமைக்கத் தெரிந்த பிறகு என்ன சிக்கல் இருக்கமுடியும்?
தமிழன் அதையெல்லாம் துருவிப் பார்க்கவேண்டிய நிலையில் இல்லை. சொரணை என்ற குணத்தை இழந்தும் வெகுகாலமாகிவிட்டது. அவன் ராஜ விசுவாசம் மிக்கவன். அம்மாபெரும் குடும்பத் தலைவர், முத்தமிழ் வித்தகர் மட்டுமில்லை, தமிழ்நாட்டு ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவர். இருக்க நிலமும் தலைக்கு மேல் கூரையும் அவனது உயிர்காக்கும் காப்பீட்டுத் திட்டத்தையும் அளிப்பவர். அவருக்காக ஒரு தொண்டர் கோவில் கட்டுகிறாராம். கண்டிப்பாகக் கட்டவேண்டும். நடிகை குஷ்புவுக்கே தமிழ் மக்கள் கட்டியபோது கலைஞருக்குக் கட்டுவதில் என்ன தவறு? அதை அவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். கடவுள் போன்றவர். கடவுளைவிட மேலானவர். கடவுளை வேண்டினால்தான் வரம் கிடைக்கும். கிடைக்காமலும் போகும். அவனவனது விதியை, அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. கலைஞரோ நிஜமாகவே வேண்டாமலே ,கேட்காமலே கொடுப்பவர்.

அத்தகைய மாமனிதர் தமிழுக்கு ஒரு விழா எடுக்கிறார். அதற்காக ஒரு பாடலை இயற்றினார். அதன் தலைகால் புரியாமல் போனாலும் தூய தமிழில் எழுதப்பட்ட பாடல். அதை மெருகேற்ற இளைய தலைமுறைக்கேற்றவாறு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து- பாவம் எத்தனை கஷ்டப்பட்டாரோ- மத்திய அமைச்சர் ராசாவின் புண்ணியத்தில் தமிழர்களின் மொபைல் ரிங் டோனாக இலவசமாகக் கிடைத்தது. கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள். மாநாட்டிற்காக. அதை எல்லா தமிழனும் கண்டு களிக்க தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை கிடைத்தது. எத்தனை கரிசனம் கலைஞருக்கு! பிள்ளைகளுடன் கோவைக்கு ஒரு சுற்றுலா செல்ல எப்படிப்பட்ட வாய்ப்பு! மாநாட்டு ஏற்பாடுகள் தமிழனின் வாயைப் பிளக்க வைத்தன. மாநாட்டுப் பந்தலின் முன் வரிசைகள் முழுவதும் நியாயமாக அரசு குடும்பத்து உறுப்பினர்கள் நிரப்பிக் கொண்டார்கள். அதற்குப் பின்னால் இருந்தவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள். வெகு உற்சாகமாக தொலைக்காட்சி காமிராக்களுக்குக் கையசைத்துக்கொண்டிருந்தார்கள். தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமுண்டா என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் தமிழுக்காக வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். விழா நாயகரின் ஆஸ்தான துதிபாடிகள் மேடையில் அவருக்குச் சாமரம் வீசியபடி இருந்தார்கள். தமிழில் புலமை மிக்கவர்கள். தங்கள் புலமையைத் துதிபாடிக் காட்டுவதிலேயே ஆர்வமுள்ளவர்கள். வல்லவர்கள். அரசருக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அத்தனை வேலை பளுமிக்க அரசருக்கு அத்தகைய ஆட்கள் அருகில் இருப்பது தேவைதான். அவர்களது துதிபாடல்களே அவரை இன்னமும் மார்க்கண்டேயனாக வைத்திருக்கும் டானிக் என்று வதந்தி. அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனியும் பொடிவைத்துப் பாடும் அவர்களது சொற்களில் கலந்திருக்கக்கூடும். அவர்கள் மொத்தத்தில் பாக்கியசாலிகள். "செம்மொழி சிங்கமே! எங்கள் செல்லச் சிங்கமே! உன்னைக் கும்பிட்டால் ஊரைக் கும்பிட்டமாதிரி!" "தலைவா. நீ சாகா விளக்கு , அகலாவிளக்கு" "சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய் , திரை உலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள், ஆனால் திரை உலகையே கலைஞர் ஜெயித்திருக்கிறார்" போன்ற ரத்தினமாய் ஜொலிக்கும் தமிழ்க்'கவிதைகளை' ஜோடித்து அரசருக்கு சற்றும் அலுப்புத் தட்டாமல் பார்த்துக்கொண்டார்கள். ஒவ்வொரு வரியைக் கேட்கும்போதும் அரசருக்குத் தெம்பு அதிகரித்தது. தாமே ‘தமிழினக் காவலர்’ என்று உறுதி பிறந்தது.
ஆமாம், யாருக்கு நடந்த விழா அது? யாருக்கும் அதைக் கேட்கத் தோன்றக்கூட இல்லை. அது அசம்பாவிதமான கேள்வி. முதல்வர் கருணாநிதியின் படைப்புகளைப்பற்றி 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவருடைய மகள் கனிமொழியின் கவிதைகள் பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டின் அழைப்பின் பேரில் வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் , வந்த மிகச் சில சிறந்த ஆய்வாளர்கள் தங்கள் அமர்வுகளில் இருந்த காலி இருப்பிடங்களைக்கண்டு நொந்தார்கள். அவமானப் பட்டார்கள். ஈழத் தமிழ் படைப்பாளிகளைக் காணோம். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கொழும்பிலிருந்து வருகை தந்தது இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்று தெளிவு செய்துவிட்டது. அது போதாதா கருணாநிதிக்கு, விஷமிகள் பலரின் வாயை அடைக்க? தமிழின விரோதி என்று அவரைப் பழித்தார்கள்! அவரை. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவரை. விரலைக் கீறி தனது குறுதியால் 'தமிழ் வாழ்க' என்று 14 வயதில் சுவரில் எழுதியவரை. தொடர்ந்து தமிழுக்காக, தமிழினத்துக்காக வாழ்பவரை. அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆங்கிலம் பேசத்தெரியாமல், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் எல்லோருக்கும் விளங்குகிற மொழியில் நாடாளுமன்றத்தில் பேச இயலாமல் தமிழில் பேச அனுமதியில்லாமல் கூனிக்குறுகி ஓடி ஒளிந்தபோது அவரது தமிழ் ரத்தம் எப்படிக் கொதித்தது என்று யாருக்குத் தெரியும்? தமிழின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை அந்தத் தகுதியில்லா வட இந்திய அரசியல்வாதிகள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? எப்படியோ செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் செம்மொழி என்பதன் விளக்கம் தமிழனுக்கே தெரியாத நிலையில் வட இந்தியனுக்கு எப்படித்தெரியும்? இப்படிப்பட்ட மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து பாமரத் தமிழனையும் வட இந்திய அரசியல் பெருந்தகைகளையும் அழைத்து அசத்தினால் தமிழுக்கு லாபமோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் லாபம். பல அரசியல் காய்களை வீழ்த்தும் மிகச் சுலப கோலாகல யுக்தி. அவரது அரசியல் பலம் புலப்படும். தமிழை நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய அந்தஸ்துடன் தேசிய மொழியாக்கும் முயற்சி வெற்றிபெற்றால் அதைவிட தமிழுக்கு சிறந்த தொண்டு எந்தக் கொம்பனும் செய்திருக்கமுடியாது. தனது இலங்கைத் தமிழர் பிரச்சினை அணுகுமுறையை விமர்சிப்பவர்களுக்கும் இது ஒரு பதில். அந்த ஐந்து நாட்களும் கோவை வானம் அதிர்ந்தது - "தமிழ் என்றால் கலைஞர். கலைஞர் என்றால் தமிழ்" என்ற முழக்கத்தில்.
தமிழ் சினிமாக்கள் எல்லாம் தூய தமிழ் தலைப்பில் வருகின்றன. கடைகளின் பெயர்கள் தமிழில். வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படவிருக்கின்றன. அவரது அரசின்கீழ் மேயரிலிருந்து எல்லா ஊழியரும் தமிழார்வம் மிக்கவர்கள். பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளிகளைத் தேடி அலைகிறார்கள். அதற்கு அவர் பொறுப்பில்லை. அவரது மகளே ஆங்கிலப் பள்ளியில் படித்தாள். நல்ல வேளை, அவளால் தில்லியில் அந்தத் திமிர் பிடித்த கூட்டத்தைச் சமாளிக்க அவளது ஆங்கிலம் உதவுகிறது. மற்றவர்கள் தமிழில்தான் படிக்கவேண்டும்- மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் - எல்லாமே. வெளி இடத்தில் எவனும் வேலை கொடுக்கமாட்டான் . வெளிநாட்டுக் கம்பெனிகள் சென்னைக்கு வருவது பொருளாதாரத்துக்கு நல்லது. அவர்கள் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதற்குத் தீர்வும் சமாதானமும் வெகு சுலபம். தமிழில் படித்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை. பிரித்தாளும் அரசியலா ? தமிழுணர்வு அற்றவர்கள்தான் அப்படிச் சொல்வார்கள்.
கருணாநிதியின் செயல்பாட்டில் எதுவுமே அரசியல் இல்லை. தமிழினத் தலைவர் தமிழன்னைக்குச் செய்யும் ஒப்பற்ற தொண்டு மட்டுமே. தமிழன்னை எங்கே?
உஷ். ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்க

No comments:

Post a Comment