Pages

Sunday, July 4, 2010

பாரதியாரின் இந்தியா இதழ் கட்டுரை மாஜினியைப் பற்றி

மாஜினி

மாஜினி என்ற இத்தாலிய தேசபக்தர் பால இத்தாலி என்ற சங்கம் தொடங்கி வேலை செய்தார். முதற் சருக்கத்தில் தேசபக்தர்களின் பக்கம் தோல்வியடைந்து போய், கொடுங்கோலரசாராகிய ஆஸ்திரியாவின் பக்கமே வெற்றி வாய்ந்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மாஜினி எழுதியது ( மாஜினி சுவிட்சர்லாந்தில் வாசம் செய்து வந்தான் )
எனது ஆத்மாவிலே வெளி மாறுபாடுகளால் வசப்படுத்தப்படாத ஒரு சக்தி விளஙிகி நின்றது. எனது ஆத்ம நிலை தன்னிலே தானடங்கியதாய் வெளித் தோற்றங்களினால் சலனமடையும் இயற்கையில்லாதது. ஆத்மா தன்னைச் சுழ்ந்திருக்கும் உலகை அடக்கி ஆள வேண்டியது; உலகத்தின் ஆட்சிக்குத் தான் உட்படக்கூடாது என்ற நம்பிக்கை அக்காலத்திலே எனக்கிருந்தது. எனது ஜீவமுறை உள்ளிருந்து வெளியே வீசும் தன்மை கொண்டிருந்தது. வெளியேயிருந்து உள்ளே வீசும் தன்மையுடைத்தன்று.
இத்தாலிய ஜாதியைத் துர்ப்பல நிலைக்குக் கொண்டு வந்த முக்கியமான குறையாதெனில் அது ஸ்வதந்திரத்திலே விருப்பமில்லாமையன்று. அந்த ஜாதியாருக்குத் தமது சொந்தத் திறமையிலே நம்பிக்கையில்லாமையும், எளிதில் சோர்வடைந்து விடுதலும், ஸ்திர சித்தமில்லாமையுமே முக்கிய குறையாகும்.
( ஸ்திர சித்தமில்லாவிடின் தர்மம் கூட பயனற்றதாய் முடியும் ). நம்மவரிடையே உள்ளக் கருத்திற்கும் புறச் செய்கைக்கும் லயமில்லாதிருக்கின்றது. இந்த லயமின்மை மஹா விநாசகரமானது. இதுவே நமது ஜாதியாரின் முக்கிய குறையாகும்.
இந்தப் பெருநோயாத் தீர்க்க ஒரு வழியுண்டு. அதாவது இதனளவுக்குத் தக்கபடி விஸ்தாரமாக லிகிதங்கள் மூலமாகவும், உபந்யாஸங்கள் மூலமாகவும், தேச ஜனங்களுக்கு உபதேசம் புரிவதேயாம்.
மன உறுதியிலேயும் கடைப்பிடிப்பிலேயும் திண்மையுற்று, மனச்சோர்வுக்கு வசப்படாத மனிதர்கள், நிஷ்டூரத்தை உல்லங்கனஞ் செய்து ஒரு பெரிய தர்மத்தின் பொருட்டு அபஜயத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள், இன்று தளர்ச்சியடைந்தாலும் மறுநாள் மீண்டும் உயிர்த்தெழுபவர். எப்பொழுது பார்த்தாலும் மனோயுத்தத்திற்குச் சன்னதமாகிக் காலத்தையும் விதியையும் இகழ்ந்து இறுதி வெற்றியில் நீங்காத பற்று நிரம்பியவர். இத்தன்மை கொண்ட பக்தர்களின் ஸமாஜம் ஒன்று இன்றியமையாதது.
( 21. 11. 1908 இதழ் 7 பக்கம் 5 --- இந்தியா ) மாஜினி

No comments:

Post a Comment